Trending News

பிளவுபடாத பிரிக்கமுடியாத ஒருமித்த நாட்டிற்குள்ளேயே தீர்வினை எதிரிபார்க்கிறோம்

(UTV|COLOMBO)-இலங்கை வந்துள்ள மக்கிலேனென் தொன்பெர்ரி தலைமையிலான அமெரிக்க காங்கிரஸ் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா சம்பந்தனை நேற்று (30) கொழும்பில் சந்தித்தனர்.

நாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்து உறுப்பினர்களை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், நாட்டில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டு நாட்டை முன்னேற்றி செல்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் சேர்ந்து பயணிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தினார். மேலும் நாடு தற்போதுள்ள நிலைமை குறித்து தமது அதிருப்தியையும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

கேள்வியொன்றிற்குபதிலளித்த இரா. சம்பந்தன், பெரும்பான்மையான மக்கள் தேசிய பிரச்சினைக்கான தீர்வு நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் ஒரு அரசியல் யாப்பின் தேவையும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் சிங்கள தலைவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமல் இருப்பதுதான் காணப்படுகின்ற பிரச்சினையாகும் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

சில சிங்கள தலைவர்கள் அனைத்து மக்கள் குறித்தும் நியாயமாக சமத்துவமாக நோக்குவதனை விடுத்து கடும்போக்காளர்களை திருப்திபடுத்துவதிலேயே ஆர்வமாக உள்ளனர் என்றும் அவர்கள் இவ்வாறே தொடர்ந்தால் நாடு மீண்டும் பின்னோக்கி செல்ல நேரிடும் என்பதனையும் வலியுறுத்தினார்.

மேலும், ஜனாதிபதியும் பிரதமரும் இதயசுத்தியுடன் சிங்கள மக்களிடம் சென்று புதிய அரசியல்யாப்பிற்கான தேவையினை எடுத்துக்காட்ட வேண்டும் எனதெரிவித்த இரா சம்பந்தன், 1988 ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு அரசாங்கமும் ஜனாதிபதியும் இது தொடர்பில் முயற்சிகளை எடுத்து வந்துள்ளமையினால் இந்த கருமங்களை விளங்கிக்கொள்வதில் சிங்கள மக்களிற்கு சிரமம் இருக்காது என்பதனையும் எடுத்துக் கூறினார்.

நாம் பிளவுபடாத பிரிக்கமுடியாத ஒருமித்த நாட்டிற்குள்ளேயே ஒரு தீர்வினை எதிரிபார்க்கிறோம் என்பதனை வலியுறுத்திய இராசம்பந்தன், அதிகாராப் பகிர்வானது சர்வதேச உடன்படிக்கைகளான சிவில் மற்றும் அரசியல் உரிமைகள், பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சர்வதேச மனித உரிமைகள் சாசனம் போன்றவற்றின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.

தேக்க நிலையிலுள்ள புதிய யாப்பு உருவாக்க நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன், புதிய அரசியல் யாப்பானது நாட்டில் நிலவும் பாரிய கடன் சுமை மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளடங்கலான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டுகொள்ள வழிவகுக்கும். எனவே இந்த முயற்சியினை நாம் கைவிட்டு விட முடியாது எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிரந்தரமான தீர்வினை புதிய அரசியல் யாப்பினூடாகவே அடைய முடியும் என்றும் புதிய அரசியல் வரைபானது பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றப்படுகின்றபோது அது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களினால் அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை தமது கட்சிக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

குறிப்பிட்ட காலஎல்லைக்குள் கருமங்கள் இடம்பெறாமல் போகின்ற பட்சத்தில் நாமும் தமிழ் மக்களும் எமது நிலைப்பாடு குறித்து மீளாய்வு செய்ய நிர்ப்பந்திக்கப்படுவோம் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கமானது 2015ல் ஐ.நா மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானதினை மார்ச் 2019 இற்குள் முழுமையாக நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருப்பதனை எடுத்துக்காட்டிய இரா.சம்பந்தன் அப்படி நிறைவேற்றுவதாக இருந்தால் கருமங்கள் துரிதகதியில் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஐ. நா.மனித உரிமை பேரவை தீர்மானத்தினை அடிப்படையாக கொண்டு இலங்கை தொடர்பில் தமது நிலைப்பாட்டினை சர்வதேச சமூகம் தெளிவுபடுத்த வேண்டும் என கோரிய இரா சம்பந்தன், இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் கடைபிடிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதனை சர்வதேச சமூகம் உறுதியாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் சர்வதேச சமூகம் இலங்கை தொடர்பில் வெறும் பார்வையாளராக மாத்திரம் இருக்க முடியாது என தெரிவித்த இரா சம்பந்தன் இலங்கை அரசு தமது வாக்குறுதிகளை நிறைவேற்றாது போகும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதிலும் மீள்நிகழாமையை உறுதி செய்வதிலும் சர்வதேச சமூகத்தின் அணுகுமுறை எவ்வாறு இருக்கும் என்பதனையும் வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த கலந்துரையாடலில் குழுவின் தலைவர் மக்கிலேனென் தோன்பெர்ரி அவர்களோடு காங்கிரஸ் உறுப்பினர்களான என்றிக்குலார், விக்கி ஹாஸ்லேர், கரோல் ஷிபோர்ட்டர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்

Related posts

New Non-Cabinet, Deputy, and State Ministers take oaths

Mohamed Dilsad

ஒரே நேரத்தில் அதிகமான கொள்களன்கள் வெளியேற்றப்பட்டமை கடும் வாகன நெரிசல்

Mohamed Dilsad

අදත් මෙරටින් කොවිඩ් මරණ දෙකක් [RELEASE]

Mohamed Dilsad

Leave a Comment