Trending News

கிராமம் ,நகரம் என்ற பேதமின்றி பாடசாலை வளப்பகிர்வு இடம்பெற வேண்டும்; வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !

(UTV|COLOMBO)-“பாடசாலைக்கு தேவையான கட்டிடங்களையும் ,வளங்களையும், அடிப்படை தேவைகளையுமே அரசியல் வாதிகளால் பெற்றுத்தரமுடியும். கல்வித்தரத்தை அதிகரிக்க செய்வதும் மாணவர்களை ஒழுக்க சீலர்களாக மாற்றியமைப்பதும், ஆசிரிய சமூதாயத்தின் பெரும் பொறுப்பாகும்.” இவ்வாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபர் எம். எஸ் .ரம்சீன் தலைமையில் இடம்பெற்ற மூன்று மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதம விருந்தினராக இன்று (31)அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களான முத்து முஹம்மது ,தாஹிர் மௌலவி, பாரி ,லரிப் உட்பட பல அதிதிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உரையற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

பாடசாலையில் நல்ல பெறுபேறும் சிறந்த அடைவு மட்டமும் கிடைக்கும் போது மாணவர்கள், ஆசிரியர் குழாம் ,பெற்றோர்கள் மாத்திரம் மகிழ்ச்சி அடைவதில்லை, குறித்த பாடசாலையின் வளர்ச்சிக்கும் ,தேவைகளுக்கும் ஒத்தாசையளித்த அரசியல்வாதிகள் பெரும் பூரிப்பு அடைகின்றனர்.

“முஸ்லிம் மகா வித்தியாலயம்” என்ற பெயரிலான இந்த கல்லூரியில் மூவின மாணவர்களும் அந்நியோன்னியமாகவும் நல்லுறவுடனும்,கல்வி கற்பது சிறப்பானது . அதே போன்று சகோதர தமிழ் ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் கல்வி கற்பிக்கின்றனர் .நகரப்புறத்திலே இந்த பாடசாலை அமைந்திருந்த போதும் இந்த மாவட்டத்தின் கிராமப்புறத்திலிருந்தும் தொலைவான இடங்களில் இருந்தும், வந்து கற்கும் மாணவர்களும் தேசிய ரீதியில் சாதனைகளை ஈட்டுவது சிறப்பம்சமாகும்.

கல்வியானது எல்லோருக்கும் சமனாக வழங்கப்பட வேண்டும், கிராமம் ,நகரம் ,என்ற வேறுபாடின்றி வளப்பகிர்வும், ஆசிரிய பரிமாறல்களும் இடம்பெற வேண்டும். இவ்வாறு நடை பெற்றால் மாவட்டத்தின் கல்வித்தரத்தை உயர்த்த முடியும். அந்த வகையில் வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் தனது கடமையை சீராக செய்வது மகிழ்ச்சி தருகின்றது.

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இம்முறை 38 மாணவர்கள் பல்கலைக்கு தெரிவாகும் தகுதியை பெற்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தருகின்றது. இந்த பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துமாறு கல்வியமைச்சரிடம் நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அவர் தரமுயர்த்தியமைக்காக நன்றி கூறுகின்றேன்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள பல முன்னணி பாடசாலைகள் கல்வியிலும் விளையாட்டிலும் போட்டி போட்டு தாமும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் இயங்கி வருவதால் மாவட்டத்தின் கல்வித்தரம் மேம்பட்டுவருகின்றது.

என்னைப்பொறுத்த வரையில் நான் அரசியலில் கால்வைத்த காலம் முதல் வன்னி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் ஆக்க பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகின்றேன் . எல்லாக்கோணத்திலும் பாடசாலைகளின் கல்வியை மேம்படுத்த உதவி இருக்கின்றேன். இனி வரும் காலங்களிலும் உங்களின் அடிப்படை தேவைகளை அடையாளப்படுத்தி தந்தால் தொடர்ந்தும் உதவியளிப்பேன் என்றார்.

 

-ஊடகப்பிரிவு-

 

 

 

 

Related posts

One electrocuted at Karandeniya

Mohamed Dilsad

நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்

Mohamed Dilsad

කටුනායකට පැමිණි ගුවන් යානා 04ක් ආපසු හරවා යවයි.

Editor O

Leave a Comment