Trending News

இறைமையைப் பாதுகாக்கும் முஸ்லிம்களுக்கு இனவாதிகள் தரும் பரிசா இது? பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-அரசாங்கத்தினதும், பொலிஸாரினதும் பாதுகாப்பில் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்தால், தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக போராடியது போன்று, முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதத்தைத் தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கம் உருவாக்கி விடக்கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாராண சூழ்நிலை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று  (06) இடம்பெற்ற விஷேட ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மதஸ்தலங்களையும், சொத்துக்களையும் நாசமாக்கும் காடையர்களுக்கு வழங்கும் தண்டனை மூலம் இனி ஒருபோதும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் கூடாது என்ற வகையில் அரசாங்கம் அம்பாறை மற்றும் திகன சம்பவங்களில் சம்பந்தப்பட்ட காவாலிகளுக்கும், காடையர்களுக்கும் அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று அமைச்சர் உயர்சபையில் வலியுறுத்தினார்.

தெல்தெனியவில் குமாரசிறி என்ற அப்பாவி ஒருவரின் மரணத்துக்குக் காரணமான முஸ்லிம் பெயரை தாங்கிய குடிகாரர்களின் செயலுக்காக, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை பழிவாங்கிய காடையர்களை எதுவித தயவு தாட்சண்யம் இன்றி சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை வழங்காத வரை, முஸ்லிம்கள் இந்த நல்லாட்சியில் நம்பிக்கை வைக்கப் போவதில்லை.

(05) கண்டி, திகன, கட்டுகஸ்தோட்டை பிரதேசங்களுக்கு நாங்கள் சென்றிருந்த போது, இன்னும் அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பது வெட்கமில்லையா என அவர்கள் எம்மிடம் கேட்கும் போது, நாம் எதைத்தான் கூறுவது?

தெல்தெனியவில் மரணமானவரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் நாளான நேற்று, அங்கு இனவாதிகளால் பாரிய அசம்பாவிதங்கள் நிகழ்த்தப்பட வாய்ப்புண்டு என நாங்கள் ஜானாதிபதியிடமும், பிரதமரிடமும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம்.

பொலிஸாரும், அதிரடிப் படையினரும் போதுமானளவு குவிக்கப்பட்டிருப்பதாகவும், பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் எமக்கு உறுதிமொழி வழங்கப்பட்ட போதும், அவைகள் எல்லாம் பொய்ப்பிக்கப்பட்டு, ஓர் இன சங்காரமே நடந்து முடிந்திருக்கின்றது.

தெல்தெனிய சம்பவத்தில் அந்த ஊரில் வாழும் சிங்களவர்களும், முஸ்லிம்களும் புரிந்துணர்வுடன் சமாதானமாகி பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 15 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது. எனினும், மஹாசொன் பலகாய என்ற இனாவாத இயக்கத்தைச் சேர்ந்த அமித் வீரசிரி மற்றும் மட்டக்களப்பில் பௌத்த தருமங்களுக்கு மாற்றமாக நடந்துகொள்ளும் மதுகுரு ஒருவரும் சேர்ந்தே இந்த அடாவடித்தனத்தை நடாத்தி, அத்தனை அழிவுகளுக்கும் காரணமாய் இருந்திருக்கின்றனர். இவ்வாறான கயவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும்.

முஸ்லிம் பெயர்களைத் தாங்கிய அந்த குடிகார இளைஞர்களுக்கு எந்தத் தண்டனை வழங்கினாலும் முஸ்லிம் சமூகம் அதனை பொருட்படுத்தவில்லை. ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்து இனவாதிகளை சுதந்திரமாக வீதிகளில் நடமாடச் செய்து காட்டுமிராண்டித் தனத்தை நடத்தி முடித்திருக்கின்றார்கள்.

அதேபோன்று கடந்த வாரம் அம்பாறை நகரில் ஹோட்டல் ஒன்றுக்குள் சென்று, உலகத்திலேயே இதுவரை கண்டுபிடிக்கப்படாத மருந்தொன்றை கொத்துரொட்டிக்குள் போட்டதாக அச்சுறுத்தி கூறச் செய்து அதை காரணங்காட்டி அந்த ஹோட்டலை தகர்த்ததுடன், அதற்கு வெகுதொலைவில் இருந்த இரண்டு ஹோட்டல்களை அடித்து நொருக்கிவிட்டு, பள்ளிவாசலையும் முற்றாகச் சேதப்படுத்தினர்.

இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து ஓரிரவு கூட சிறையில் அடைக்காது, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குற்றச்சட்டை வாபஸ் வாங்கி, வேறொரு சட்டத்தின் கீழ் அந்த சந்தேக நபர்களின் குற்றங்களை பதிவு செய்து நீதிமன்றத்தில் பிணை வாங்கிக் கொடுத்துள்ளனர். பொலிஸார் ஒருதலை பக்கச் சார்பாகவும் நடந்திருக்கின்றனர்.

பாரபட்சமாக நடந்துகொண்ட அம்பாறை பொலிஸாருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் பிரதமரிடமும், பொலிஸ்மா அதிபரிடமும் வலியுறுத்தினோம். எமக்கு அவ்வாறான உறுதிமொழி வழங்கப்பட்ட போதும், இன்றுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை வேதனையுடன் தெரிவிக்கின்றோம்.

திகன பல்லேகலையில் ஊரடங்குச் சட்ட நேரத்தில் வீடுகளைக் கொளுத்தியதால் அதற்குள் அப்பாவி முஸ்லிம் இளைஞர் ஒருவர் சிக்குண்டு அநியாயமாக உயிரை பறிகொடுத்துள்ளார்.

இந்த நாட்டில் முஸ்லிம்கள் செய்த தவறுதான் என்ன? நாட்டின் இறைமைக்காக பாடுபட்டது தவறா? சமாதானம் வரவேண்டுமென நினைத்தது தவறா? நாடு பிளவு படக்கூடாது என்று எண்ணியது தவறா? தமிழர்களுடனும், சிங்களவர்களுடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நினைப்பது தவறா? ஏன் இந்த சமூகத்தை இவ்வாறு அழிக்கத் துடிக்கின்றார்கள்? முஸ்லிம்களின் சொத்துக்களை நாசமாக்க ஏன் அலைந்து திரிகின்றார்கள்? என்று அமைச்சர் பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்…

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Morgan banned from 4th Pakistan ODI for slow over-rate

Mohamed Dilsad

தாஜுடீனின் கொலை தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் வாய்திறந்தார்

Mohamed Dilsad

Conor McGregor suspended for 6-months for post-UFC 229 melee

Mohamed Dilsad

Leave a Comment